May 10, 2009

சோ-வின் எங்கே பிராமணன் - (உடலும் உடையும்)


சோ-வின் 'எங்கே பிராமணன்' எனும் தொடரில் அவர்கள் விவாதிக்கும் கருத்துக்கள் உபநிஷத்துக்கள் வேதங்களையொட்டி அமைந்திருக்கும் என்று அறிவித்திருந்தனர். தொலைக்காட்சி தொடர் என்றாலே விருப்பமில்லாது இருந்த நான், நல்ல கருத்துக்களுக்கு செவி சாய்ப்போமே என்ற எண்ணத்தில் பார்க்கத்துவங்கினேன்.

பல அறிய தகவல்கள், கதைகள் பறிமாறியிருக்கிறார் சோ அவர்கள். சமயம் சார்ந்த விஷயங்களை விட ஆன்மீக விஷயங்களை அதிக ஆவலுடன் கவனித்து வருகிறேன். அவற்றுள் என்னைக் கவர்ந்த சில கருத்துக்களை விவாதங்களை எழுத்தாய் பத்திரப்படுத்தி வைக்க ஆவலின் பேரில், என்னுடைய சில பதிவுகள்.

"எங்கே பிராமணன்" என்றவுடனேயே நாம் ஜாதியை முதலில் மனத்தில் நிறுத்திவிடுகிறோம். பிராமணன் என்பவன் பிறப்பால் பிராமணீயத்தை ஏற்றுக்கொண்டவன் அல்ல. 'பிரம்மம்' என்பது பரம்பொருளைக் குறிக்கும் சொல். பரப்பிரம்மத்தை குறிக்கும் சொல். எவன் ஒருவன் பிரம்மத்தின் தியானத்தில் ஈடுபடுகிறானோ அவனே பிரம்மணீயத்தைத் தழுவியவன். பிரம்மணீயம் என்பது ஜாதியல்ல. அது ஒரு "நிலை". இறையானுபவத்தில் ஈடுபடும் எவரும் அந்த நிலைக்கு தங்களை கொண்டு செல்ல பிரயத்தனப்படுபவர்கள் ஆவார்கள். அதனால் இத்தொடரில் கூறப்படும் செய்திகள், தகவல்கள் கருத்துக்களை ஜாதி நினைவுகளற்று இறை நினைவுடன் கேட்டுத் தெரிந்து கொள்வது சிறந்தது.


இத்தொடரில் அஷோக் என்ற வாலிபன், சுயத்தின் தேடலில் ஈடுபடுகிறான். இளம் வயதிலேயே ஆன்ம வெளிபாட்டைத் தாண்டிய வேதாந்த தேடலில் ஈடுபடுகிறான். அவன் பிறந்தநாளையொட்டி அவன் பெற்றோர் புதுத் துணி வாங்கி வருகிறார்கள்.

"நீங்கள் குடுத்த இந்த உடம்பு எனும் சட்டை இருக்கையில் எனக்கென் புதுச்சட்டை" என்று மறுத்துவிடுகிறான் அஷோக். "பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த கணம் முதலே மரணத்தை நோக்கி தம் பயணத்தை தொடங்கிவிடுகின்றனர். இதில் கொண்டாட என்ன இருக்கிறது. பிறந்த நாள் என்பது வெறும் மயில்கல்" என்கிறான்.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ அபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான்
யன்யானி சம்யாதி நவானி தேஹீ

(கீதை: 2:22)

என்கிறது கீதை. பழைய கிழிந்து போல உடைகளை களைந்து எவ்வாறு புது உடை அணிகின்றோமோ, அவ்வாறே நைந்து போன உடல்களை களைந்து ஆன்மாவும் புது உடல் புகுகின்றது என்பது இதன் விளக்கம். இதை பல முறை படித்தபின்பும் மரண பயம் அற்றுவிடுவதில்லை. மறுபடி மனம் மயங்கி அதன் பாதையில் எண்ண ஓட்டத்தை தொடர்கிறது. நம்பிக்கை என்பது அடிப்படை விஷயம். நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயத்தின் பேரில் நம்பிக்கை அற்று இருப்பது, பயத்தின் முதல் காரணம்.

உடைகளைக் களைவது உடல்களைக் களைவதைப் போல் என்றால், ஏன் பயமும், கண்ணீரும் தயக்கமும்? உடைகளைக் களைந்த பின்பும், வேறு உடை அணியும் பின்பும், நம் identity தனித்துவம் அழிவதில்லை. அதே மனிதர்கள், முகங்கள், பாசங்கள், பிணைப்புகள். உடலைக் களைந்தால் பின் நேர்வதைப் பற்றி நமக்கு புலப்படுவதில்லை. மறுப்பிறவிகளில் நம்பிக்கை இருப்பினும் கூட, இப்பிறவியில் இந்த உறவுகளை விட்டு மறந்து, பறந்து போகிறோம் என்ற எண்ணமே கண்ணீருக்கும் கவலைக்கும் காரணம். நம்மைப் பிரிவுத் துயரம் ஆட்கொள்கிறது.

எல்லா உயிரும் வேவ்வேறு உரு தாங்கிய ஒரே சாராம்சம் என்ற எண்ணம் வேறூன்றிய உயர்நிலை மக்களுக்கு இந்த அஞ்ஞானம் இல்லாததால், அவர்களை பயமோ சந்தேகமோ ஆட்கொள்வதில்லை.

உடல் என்பது சட்டையைப் போன்று தான்....யோகிகளுக்கும், ஞானிகளுக்கும்.

7 comments:

  1. நான் ஒவ்வொரு எபிசோடையும் கவர் செய்கிறேன். எதௌ பதிவில் எங்கே பிராமணன் என்ற லேபல் கீழ் பார்க்கவும்.

    ஏதேனும் எபிசோட் விட்டுப் போனாலும் கவலை வேண்டாம். எல்லாவற்றுக்கும் வீடியோ லிங்கை தலைப்பிலேயே தந்துள்ளேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. வணக்கம் ராகவன் வருகைக்கு நன்றி.
    உங்கள் "எங்கே பிராமணன்" தொடர்புடைய சில பதிவுகளை நான் முன்பொரு முறை படித்திருக்கிறேன். சுட்டிக்கும் விடியோ சுட்டிக்கும் மிக்க நன்றி.

    மன்ற மையத்தில் இதுநாள் வரை தினமும் நான் இத்தொடரைப் பற்றி எழுதி வந்தேன். இங்கே நான் பதிக்கபோவது அது தொடர்பான புராணக் கதைகளும், நல்ல கருத்துக்களூம் அதை சார்ந்த விஷயங்களும் மட்டுமே.

    ஏதேனும் சுட்டி தேவைப் பட்டால் நிச்சயம் தங்கள் பதிவை நாடுவேன். ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.

    அன்புடன்,
    ஷக்தி

    ReplyDelete
  3. தொடருங்கள் ஷத்தி

    காற்றினில் மணம் பரவ நுகர்வோர் கூடுவர்

    வாழ்த்துக்கள்

    "அ"

    ReplyDelete
  4. //உடல் என்பது சட்டையைப் போன்று தான்....யோகிகளுக்கும், ஞானிகளுக்கும்.//

    உள்ளத்தால் எந்த கர்மாவிலும் (செயலிலும்) செயல் பட முடியாது.
    செயல்படத் துடிக்கும் நினைப்பு மட்டுமே;
    இதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. என்ன கொடுமை?
    செயல்படத் தோன்றாத் துணையாய் இருப்பது உடலே; இறைவனின் ஏற்பாடும் அதுவே!

    கர்மாதான் அடுத்த பிறவிக்கோ அல்லது 'அவனை'ச் சேருவதற்கோ அடிப்படை. அந்த நிலையில் உள்ளத்தின் 'டூலாக'ச் செயல்படுவது உடலே! அதனால் தான் 'உடலைப் பேணும் உபாயம் அறிந்து உடலை வளர்த்தேனே; அதனால் உயிரையும் வளர்த்தேனே' என்றனர் சித்தர்கள்.
    இந்த நிலையில் 'வெறும் சட்டை' உடை என்பதை விடக் கூடுதலான முக்கியத்துவம் , உடைத்தானது உடல் என்று நினைக்கிறேன்.

    திரு. சோ அவர்களின் இந்தத் தொடரை யாரும் பார்க்கத் தவறுவதில்லை என்பது பலரிடம் பேசுகையில் தெரிகிறது..
    தொடராக வந்த பொழுது படித்ததை விட, தொழிற்நுட்ப கூடுதல் சிறப்புகளும் கொண்டு இன்னும் சுவாரஸ்யமாக இப்பொழுது இருக்கிறது என்பதும் உண்மை.

    உங்கள் கருத்துக்களை நன்கு சொல்லியிருக்கிறீர்கள்..

    ReplyDelete
  5. தொடர்ந்து தொடரும் என்கிற எதிர்பார்ப்போடு...

    ReplyDelete
  6. //'பிரம்மம்' என்பது பரம்பொருளைக் குறிக்கும் சொல். பரப்பிரம்மத்தை குறிக்கும் சொல். எவன் ஒருவன் பிரம்மத்தின் தியானத்தில் ஈடுபடுகிறானோ அவனே பிரம்மணீயத்தைத் தழுவியவன். பிரம்மணீயம் என்பது ஜாதியல்ல. அது ஒரு "நிலை".//

    இங்கேயே உங்கள் பதிவு முடிந்துவிட்டது அதன்பின் ஏதுமில்லை. :)

    இவன்

    D.R.அஷோக்

    ReplyDelete
  7. நன்றி ஜீவ், அ, ashok.

    நல்ல தொடர் சீக்கிரமே முடிந்து போனது என் மனதுக்கு வருத்தமாய் இருந்தது.


    ஒவ்வொரு episode-ம் எழுதி வேறொவு வலை தளத்தில் இட்டு வந்தேன். இப்பொழுது தொடர் முடிந்து விட்ட பட்சத்தில், என் வலைப்பதிவில், இதே தலைப்பில் தொடர்வது எந்த அளவு பொருந்தும் என தெரியவில்லை. எழுதியிருக்கும் சாராம்சத்தை வேறு தலைப்பில் இடலாமா என யோசித்து வருகிறேன்.

    மிக்க நன்றி.

    //இங்கேயே உங்கள் பதிவு முடிந்துவிட்டது அதன்பின் ஏதுமில்லை. :)//

    Ashok,

    அழகான பின்னூட்டம். நன்றி :)

    ReplyDelete