January 20, 2011

பஞ்சதந்திர கதைகள் (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

நம்மில் சிலருக்கு இறைவன் இருக்கின்றானா என்றே சந்தேகம் வருகின்றது. கண்ணுக்கு புலப்படாத வஸ்து என்பதால் நம்புவது சாத்தியமாவதில்லை. மேலும், நமக்கு சாதகமான காரியம் நடைபெறாவிட்டால், கோபம் கொண்டு இறைவனை சந்தேகிக்கிறோம். உலகில் நடைபெறும் பல அதர்மங்களும் கொடூரங்களும் இன்னல்களும் வக்ரங்களும் பல்கிவிட்ட நிலையில் சந்தேகம் இன்னும் வலுவடைகிறது. இறைவன் என்ற தத்துவமோ, அல்லது எதுவுமோ கூட, நம்பினாலேயொழிய நமக்கு கிட்டுவதில்லை. சந்தேகம் என்பது நம்மை சாதிக்க விடாது செய்யும் வியாதி. சந்தேகம் எவர் மீது விழுந்தாலும், நம் திறமை மீதே அமைந்துவிட்டாலும் கூட அதனால் பாதகமே அதிகம் விளைகிறது. நம்பத் தகுந்த விஷயங்களை நம்புவதால், சாதாரண நம்பிக்கை தாண்டிய, "பரிபூரணமாக" நம்பிக்கை வைப்பதால் அரிய விஷயங்களை கிடைக்கப் பெறலாம். விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பலவும், நாம் நம்ப மறுத்த ஒன்றை அவர்கள் நம்பியதால் நிகழ்ந்த வினோதங்கள்.

"சந்தேகம் கேட்டையே விளைவிக்கும்" என்ற கருத்தை வலியுறுத்த பீஷ்மரும் யுதிஷ்டிரரருக்கு சிறு கதையின் மூலம் படிப்பிக்கிறார்.

காட்டில் ஒரு நரி, சிறந்த நற்குணங்களும், தர்ம சிந்தனையும், ஒப்பற்ற அறிவும் கூடியதாய் வாழ்ந்து வருகிறது. மற்ற மிருகங்களுக்கும் படிப்பினை போதிக்கிறது. "ஒருவனின் குணம் அவன் இருக்கும் இடத்தை பொருத்து அமைவதில்லை. அவனின் அறிவும் மனமுமே நிர்ணயிக்கிறது. ஒரு ஆசிரமத்தில் கொலை நிகழ்ந்துவிட்டதால், ஆசிரமம் புனிதம் என்பதால், கொலை பாபம் வந்து சேராது இருக்குமா?" என்றெல்லாம் வியாக்கியானம் செய்கிறது. இதனை கேட்ட புலி மிகவும் புகழ்ந்து நரிக்கு அமைச்சர் பதவியை வழங்குகிறது. நரி முதலில் மறுக்கிறது "ஸ்திரமற்ற ராஜாவின் புத்தி, பின்னாளில் சந்தேகத்தின் பேரில் மாறக்கூடும், எனக்கு பதவி வேண்டாம்" என்கிறது. புலியோ நரியை போல் அறிவாளியை கண்டதில்லை, சந்தேகத்துக்கு இடமின்றி நரி அமைச்சர் பதவியை ஏற்கவேண்டும் என்று வற்புறுத்த நரி பதவி ஏற்கிறது.

நாளடைவில் மற்ற மிருகங்கள் நரியிடத்து பொறாமை கொண்டு அதன் பேரில் பொய்யாய் களங்கம் கற்பிக்கின்றனர். புலி அதனை நம்பி கோபம் கொள்கிறது. நரியோ, அமைதியாய், "உன் குணம் சந்தேகத்திற்கு உட்பட்டது என்று தெரியும்" என்று அமைதியாய் பதவியை விட்டு அகல்கிறது. புலி பின்னர் உண்மை உணர்ந்து தன் தவறை நொந்து மன்னிப்புக் கேட்டும், நரி மீண்டும் பதவி ஏற்க மறுத்து புலிக்கு நல்லாசி கூறி புத்திமதி வழங்கிவிட்டு, மற்ற மிருகங்களை விட்டு ஒதுங்கி தவ வாழ்கையை மேற்கொள்கிறது.
பஞ்சதந்திரக் கதையைப் போலவே இருக்கும் இக்கதையின் மூலம் பொறாமை என்னும் அழுக்கை களைவது சுலமபல்ல என்று புரிகிறது.

* கெட்ட நடத்தையுடையவன் நல்லவனை பார்த்து பொறாமை கொள்கிறான்.
* முட்டாள் பண்டிதனை பார்த்து பொறாமை கொள்கிறான்.
* இல்லாதவனுக்கு இருப்பவனிடத்து பொறாமை.

அழுக்காறு என்று சொல்லப்படும் ஒழிக்கவேண்டிய ஆறு அடிப்படை குணங்களின் (காமம், க்ரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம்) வேறுபட்ட வெளிப்பாடே பொறாமை. பொறாமையினால் தெளிந்த சிந்தை குழம்பி மனவருத்தமும் விரோதமும் வளர்கிறது. தெரிந்தோ தெரியாமலோ நம் நட்பு கொள்ளும் நபருடன், "கடும்" விரோதம் வளர்ந்து விட்டால் அதை இனி தொடர்வது உசிதமா என்ற யுதிஷ்டிரரின் கேள்விக்கும் பீஷ்மர் பதில் அளிக்கிறார்.

ஒரு ராஜாவின் அரண்மணையில் விசேஷ ஞானம் பொருந்திய குருவியும் அவருடன் நட்புடன் பாராட்டியபடி வளர்ந்து வருகிறது. நாளடைவில் ராஜாவிற்கு மகன் பிறக்கிறான். குருவிக்கும் குஞ்சு பிறக்கிறது. இளவரசனும் இளம் குருவியும் அவர்கள் பெற்றோரைப் போலவே நட்பு பாராட்டி விளையாடி வருகின்றனர். ஒரு சமயம், அவசர புத்தி காரணமாக குருவிக் குஞ்சுவின் கழுத்தை நெரித்து, இளவரசன் கொன்று விடுகிறான். கடும் கோபம் கொண்ட குருவி, இளவரசனின் இரு கண்ணையும் நோண்டி புண்படுத்திவிடுகிறது. முதலில் ராஜா கோபம் கொண்டு வெகுண்டாலும், தவறு இளவரசன் பேரிலும் இருப்பதால் குருவியை மன்னித்து விடுகிறார். குருவி வேறு இடம் பறந்து செல்ல எத்தனிக்கிறது. ராஜாவோ இரு சாராரும் மறந்து, மன்னித்து விடுவொம், அதனால் இங்கேயே தங்கிவிடு என்று கூறுகிறார். அதனை மறுத்து குருவி, "கடும் விரோதம் வளர்ந்த இடத்தில், இருப்பது உசிதம் அல்ல. சில தீங்குகள் எளிதில் மன்னிக்கப்படுவதும் இல்லை. அதன் பாதிப்பு அடங்குவதும் இல்லை. ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்தால் மனக் கசப்பும் வருத்தமும் மேலிடும், அத்தகைய உறவில் சுமூகம் இருப்பதில்லை. எனவே என்னை போகவிடு" என்று சொல்லி பறந்து விட்டது.
விரோதத்தை மன்னித்து விடுவதே உசிதம் என்றாலும் கூட எப்படிப்பட்ட விரோதம் என்பதை ஆராய்ந்து உறவின் பலமோ முறிவோ ஏற்படுகிறது.

1 comment: